ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.
மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.
இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார்.
மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.
நீங்கள் கடைசியாக எப்போது மகிழ்ச்சியில் அழுதீர்கள்? வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பிதாவாகிய தேவனே, உம்மை நேசிப்பவர்களுக்கு வரவிருக்கும் மகிழ்ச்சிக்காக உமக்கு நன்றி.