நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!” என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.
அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர்.
தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது… காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார்.
வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.
தற்போது எந்த சூழ்நிலை உங்களை பயமுறுத்துகிறது? ஜெபத்தில் உங்கள் அன்பான பரலோகத் தகப்பன் முன் உங்கள் பயத்தை கொண்டுவரும்போது அவருடைய பாதுகாப்பில் நீங்கள் எப்படி இளைப்பாறக்கூடும்?
அன்பான தேவனே, என் ஆளத்துவத்திலும் பலவீனத்திலும், நான் பயப்படுகிறேன். எனது சோதனைகள் மற்றும் அசௌகரியங்களுக்கு மத்தியிலும் உமது அன்பையும் அக்கறையையும் காணவும் அனுபவிக்கவும் எனக்கு உதவிசெய்யும்.