“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக” இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.
நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
இன்று உங்கள் வாழ்க்கையில் யாருக்கு ஜெபம் தேவைப்படுகிறது? நேரமெடுத்து இடைவிடாமல் ஜெபிக்குமாறு உங்களை எப்படி நினைவூட்டுகிறது?
பரலோகத் தகப்பனே, என் ஜெபங்களைக் கேட்டதற்கு நன்றி.