“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்… ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.