ஜெர்மானிய தேசத்தில் இருபது டன்களுக்கும் அதிகமான சாக்லேட் நிரப்பப்பட்ட டிரக்கின் குளிரூட்டப்பட்ட டிரெய்லரை திருடர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட இனிப்பின் மதிப்பிடப்பட்ட  தொகை 80,000 டாலர்கள் (சுமார் 66 லட்சம்). வழக்கத்திற்கு மாறாக யாராவது அதிகப்படியான சாக்லேட்டுகளை விநியோகிப்பது தெரிந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்க உள்ளுர் காவல்திறையினர் கேட்டுக்கொண்டனர். பெரிய அளவிலான இனிப்புகளைத் திருடியவர்கள் பிடிபட்டு வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் கசப்பான மற்றும் திருப்தியற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

நீதிமொழிகள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்துகின்றன: “வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்” (20:17). வஞ்சகமாகவோ அல்லது தவறாகவோ நாம் பெற்றுக்கொண்ட விஷயங்கள் முதலில் தற்காலிக இன்பத்தையளிக்கும் வகையில் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் சுவையானது இறுதியில் மாறிவிடும். மேலும் நம்முடைய தவறான செய்கை நம்மை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். குற்ற உணர்வு, பயம், பாவம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகள், நம் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழித்துவிடும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” (வச. 11). நம்முடைய வார்த்தை மற்றும் செயல்கள் நமது சுயநல ஆசைகளை வெளிப்படுத்தாமல், தூய்மையான தேவனுடையஇருதயத்தை பிரதிபலிக்கட்டும். 

நாம் சோதிக்கப்படும்போது, அவருக்கு உண்மையாய் செயல்படுவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்தும்படிக்கு அவரிடத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய தற்காலிக இன்பத்திற்கு நம்மை அடிபணியச் செய்யாமல், நிரந்திர மகிமைக்கு நம்மை நடத்திச்செல்லும்படிக்கு அவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கலாம்.