எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”
திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்… நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது.
குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா?
தேவனுடைய குடும்பத்தில் “அனைவரோடும் சமாதானமாக வாழ எல்லா முயற்சிகளையும் எடுப்பது” என்றால் என்ன? நீங்கள் இன்னும் ஒப்புரவாகவேண்டிய நபர் யாரேனும் இருக்கிறார்களா?
அன்பான தேவனே, என்னை உம்மிடமாய் இழுத்ததற்கு நன்றி. உம்முடைய குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சமாதானமாக வாழ எல்லா முயற்சிகளையும் செய்ய எனக்கு உதவிசெய்யும்.