சுரேஷ் மருந்து பெட்டியில் கிடைத்த அனைத்து மருந்துகளையும் எடுத்துக்கொண்டான். ஒழுங்கின்மை நிறைந்த ஓர் குடும்பத்தில் வளர்ந்த அவனது வாழ்க்கை சற்று குழப்பமானதாகவே இருந்தது. அவனுடைய தந்தை மரிக்கும்வரை தனது தாயாரை தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டே இருந்துள்ளார். தற்போது சுரேஷ் தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினான். ஆனால் தான் மரித்தால் எங்கே போவேன்? என்ற கேள்வி அவனுக்குள் உதித்தது. கர்த்தருடைய கிருபையால் சுரேஷ் அந்த தற்கொலை முயற்சியை அன்று கைவிட்டான். காலப்போக்கில், தன் நண்பர் ஒருவரின் வேதாகமத்தை வாசித்து, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான். படைப்பில் இருந்த அழகும் ஒழுங்குமே, சுரேஷை இரட்சிப்புக்கு நேராய் ஈர்த்தது எனலாம். “நான் பார்க்கும் இந்த அழகான படைப்புகளுக்கு யாரோ ஒருவர் காரணமாய் இருக்கவேண்டும்” என்று அவன் கூறுகிறான்.
ஆதியாகமம் 1இல், அனைத்தையும் உண்டாக்கிய தேவனைக் குறித்து வாசிக்கிறோம். அப்போது “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது” (வச. 2). அந்த ஒழுங்கீனத்தை அவர் மாற்றுகிறார். “வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்” (வச. 4). கடல்களுக்கு மத்தியில் வெட்டாந்தரையை ஏற்படுத்தினார் (வச. 10). வகைவகையான தாவரங்களை உண்டுபண்ணுகிறார் (வச. 11-12, 21, 24-25). “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும்… குடியிருப்புக்காகச் செய்து” படைத்தவர் (ஏசாயா 45:18), தொடர்ந்து தேசத்தை காத்து அதில் சமாதானத்தை உண்டுபண்ணி, சுரேஷ் ஒப்புக்கொடுத்ததுபோல நமது ஜீவியத்தையும் கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கச்செய்வார்.
வாழ்க்கை குழப்பமாகவும் சவாலாகவும் இருக்கலாம். அவர் ஒழுங்கீனத்தின் தேவனல்ல; சமாதானத்தின் தேவன் (1 கொரிந்தியர் 14:33). நாம் இன்று அவரை நோக்கிக் கூப்பிட்டு, அவருடைய படைப்பின் அழகையும் ஒழுங்கையும் அறிந்துகொள்ள முற்படுவோம்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன குழப்பத்தை அனுபவிக்கிறீர்கள்? அதில் ஒழுங்கையும் அமைதியையும் கொண்டுவர தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
படைப்பின் ஆண்டவரே, உம்மால் மட்டும் கொடுக்கமுடிந்த சமாதானம் மற்றும் ஒழுங்கிற்காய் நன்றி. உடைக்கப்பட்ட காரியங்கள் உம்மில் அழகாக்கப்படுகின்றன.