என் மாமியார் அவரது நாய்களுடன் பேசும் திறனைப் பற்றி நான் அடிக்கடி அன்புடன் கேலி செய்வது உண்டு. அந்த நாய்கள் குரைக்கும்போது, அவர் அவைகளுக்கு அன்பாய் பதிலளிப்பார். அவர் மாத்திரமல்ல, நாய்களை வளர்க்கக்கூடியவர்கள் அவைகளின் சிரிப்பையும் அவ்வப்போது உணரக்கூடும். நாய், பசு, நரி, சீல் மற்றும் கிளி போன்ற உயிரினங்கள் அனைத்தும் “குரல் விளையாட்டு சிக்னல்களை” கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனை சிரிப்பு என்றும் அழைப்பர். இந்த உடல்மொழிகளை வைத்து, அவைகள் யாருடனும் சண்டையிடவில்லை, மாறாக, தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.
விலங்குகள் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது, மற்ற படைப்புகள் தங்கள் சொந்த வழியில் தேவனை எவ்விதம் துதிக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. தாவீது தனது சுற்றுப்புறங்களைப் பார்த்தபோது, “மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது” என்றும் “பள்ளத்தாக்குகள்… கெம்பீரித்துப் பாடுகிறது” என்றும் அவருக்கு தோன்றியிருக்கிறது (சங்கீதம் 65:12-13). தேவன் தேசத்தை பராமரித்து, செழுமைப்படுத்தி, அழகையும் வாழ்வாதாரத்தையும் அவற்றிற்கு கொடுத்திருக்கிறார் என்பதை தாவீது உணர்ந்தார்.
நமது சுற்றுப்புற சூழல்கள் இயல்பில் பாடல் பாடக்கூடியவைகள் அல்லவெனினும், அவை தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை சாட்சியிடக்கூடியவைகள் மட்டுமின்றி, நம்முடைய குரல் ஓசையில் அவரை துதிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன. பூமியின் குடிகள் அனைவரும் அவருடைய படைப்பின் ஆச்சரியத்தைக் கண்டு மகிழ்ச்சியின் ஆரவார துதிகளை அவருக்கு செலுத்துவோம் (வச. 8). அவற்றை தேவன் கேட்டு புரிந்துகொள்ளுவார் என்று விசுவாசிப்போம்.
தேவனைத் துதிக்க உங்கள் சுற்றுப்புற அழகு எந்தவிதத்தில் உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது? அவருடைய கைவேலையை வேறு எங்கு பார்த்தீர்கள்?
தேவனே, படைப்பில் உம்முடைய தொடர்ச்சியான கிரியைகளுக்காய் உமக்கு நன்றி.