சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார்.

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், “நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்” (மத்தேயு 28:5–6) என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம்.