தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், “அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்” என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.
தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.
ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (வ.5). நாமெல்லாரும் “ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்” (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.
கிறிஸ்துவின் வாழ்வில் எந்த அம்சம் உங்களை மிகவும் பாதிக்கிறது? அவருடைய பாடுகள் உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
விலையேறப்பெற்ற இரட்சகரே, நீர் எனக்காக பாடுபட்டு, மரித்து, மீண்டும் எழுந்ததற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை விவரிக்க இயலாது. உமக்கு நன்றி.