பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் ‘மாண்டடம்’ அதாவது “கட்டளை” என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.