சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் 2022 இல், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை “செவ்வையாய்” நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, “அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்” என்கிறது.

“மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே” (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் “பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று” (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், “நீதியும் செவ்வையுமாய்” (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.