தத்துவம் மற்றும் இலக்கியப் பேராசிரியரான ஜாக், புத்திசாலியும் கூட. தனது பதினைந்து வயதில் தன்னை நாத்திகராக அறிவித்தார், மேலும் இளமைப் பருவத்தில் தனது “நாத்திக நம்பிக்கையை” பிடிவாதமாக பற்றியிருந்தார். கிறிஸ்தவ நண்பர்கள் அவரிடம் விளக்க முயன்றனர். ஜாக் கூறியது போல், “அனைவரும், அனைத்தும் மறுபுறம் சேர்ந்திருந்தன” ஆனால் வேதாகமம் மற்ற இலக்கியங்கள் மற்றும் புராணங்களிலிருந்து வேறுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. நற்செய்திகளைப் பற்றி அவர், “ஒரு கட்டுக்கதை எப்போதாவது உண்மையாகி, மனித உருவேற்பேற்றால் அது இப்படித்தான் இருக்கும்” என்றெழுதினார்.

ஒரு வேதாகம பகுதி ஜாக்கை மிகவும் பாதித்தது; யாத்திராகமம் 3. தேவன் மோசேயை எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்த அழைத்தார். மோசே தேவனிடம், ” பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்” (வ.11) என்றான். தேவன், “இருக்கிறவராக இருக்கிறேன்” (வ.14) என பதிலளித்தார். இந்த பத்தி, வார்த்தைகள் மற்றும் பெயர்கள் குறித்த சற்று கருகலாக இருப்பினும் ஆதியிலிருந்திருக்கும் தேவனின் நித்திய பிரசன்னத்தை பிரதிபலிக்கிறது. சுவாரஸ்யமாக, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” (யோவான் 8:58) என்று இயேசு சொன்னபோது அதையே எதிரொலித்தார்.

சி.எஸ். லூயிஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜாக், இந்தப் பத்தியால் ஆழமாக தொடப்பட்டார். ஒரே மெய்யான தேவன் சொல்ல வேண்டியது இதுதான்; அவர் “இருக்கிறவர்” என்று மட்டுமே. வாழ்க்கையை மாற்றும் ஒரு தருணத்தில், லூயிஸ் “தன்னை விட்டுக்கொடுத்து, தேவனே கடவுள் என்று ஒப்புக்கொண்டார்.” லூயிஸ் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் பயணத்தின் தொடக்கமாக இது இருந்தது.

ஒருவேளை நாம் லூயிஸ் போல் நம்ப இயலாமல் போராடலாம் அல்லது ஒரு மந்தமான நம்பிக்கையுடன் இருக்கலாம். தேவன் உண்மையிலேயே நம் வாழ்வில் “இருக்கிறவரா?” என்று நம்மை நாமே ஆராயலாம்.