பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது ​​நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.