கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி கடற்கரை மீன் கண்காட்சியில் நாங்கள் நுழைந்தபோது எனது மூன்று வயது மகன் சேவியர் என் கையை அழுத்தினான். உயரத்திலிருந்து தொங்கவிடப்பட்ட கூம்பு திமிங்கலத்தின் முழு அளவிலான எலும்புக்கூட்டை காண்பித்து, “எவ்வளவு பெரியது!” என்றான். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கும்போது அவனது ஆச்சரியமான மகிழ்ச்சி பெருகியது. உணவளிக்கும் நேரத்தில் நீர்நாய்களால் தண்ணீர் தெறித்துச் சிதறியதை பார்த்து சிரித்தோம். நீல நீரில் நடனமாடும் தங்க பழுப்பு நிற ஜெல்லிமீன்களால் மயங்கி, ஒரு பெரிய கண்ணாடி மீன்வளச் சாளரத்தின் முன் அமைதியாக நின்றோம். “தேவன் சமுத்திரத்தின் ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தார், உன்னையும் என்னையும் படைத்தது போலவே” என்றேன். “ஆஹா” என சேவியர் கிசுகிசுத்தான்.
சங்கீதம் 104 இல், சங்கீதக்காரன் தேவனின் அபரிமிதமான படைப்பை வியந்து, “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்” (வ. 24) பாடினான். “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வ. 25) என்று அறிவித்தான். அவர் படைத்த அனைத்திற்கும் தேவனின் தாராளமான மற்றும் திருப்திகரமான போஷிப்புகளை அவன் பறைசாற்றினான் (வ. 27-28). ஒவ்வொன்றின் ஆயுசுநாட்களையும் தேவன் தீர்மானித்துள்ளார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார் (வ. 29-30).
“நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்” (வ. 33) என்று நாமும் சங்கீதக்காரனோடு இனைந்து அா்ப்பனிப்போடு அறிக்கையிடுவோம். பெரியது முதல் சிறியது வரை ஒவ்வொரு உயிரினமும் நாம் தேவனை புகழ்வதற்கு வழிவகுக்கும், ஏனென்றால் அவை அனைத்தையும் அவரே படைத்தார்.
தேவன் உருவாக்கிய அற்புதமான உலகை ஆராய்வது, அவரைப் புகழும்படி உங்களை எப்போது வழிநடத்தியது? தனது வல்லமை மற்றும் பராமரிப்பின் மீது உங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்த தேவன் தனது சிருஷ்டிப்பை எவ்வாறு பயன்படுத்தினார்?
சர்வவல்ல சிருஷ்டிகரும் அனைத்தையும் பராமரிப்பவரே, நீரே எனது எல்லா புகழுக்கும் மிகவும் தகுதியானவர்!