என் அலுவலகம் அருகே, பல நாட்களாக ஒரு பெட்டியில் முடங்கி, நோயுற்ற பூனை ஒன்று கத்திக்கொண்டே இருந்தது. ஜூன் முன்வரும்வரை; கைவிடப்பட்ட அந்தப் பூனையைக் கடந்து சென்ற பலரும் அதற்குக் கண்டுகொள்ளவில்லை. அவர் ஒரு தெரு துப்புரவாளர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார், அங்கே தெருநாய்களாக இருந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டு அவருடன் வசித்து வந்தன.

“நான் அவற்றைப் பராமரிக்கிறேன், ஏனென்றால் யாரும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அவைகளில் நான் என்னையே காண்கிறேன், ஒரு துப்புரவாளரை யாரும் கண்டுகொள்வதில்லையே” என்கிறார் ஜுன்.

இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, யாராலும் கவனிக்கப்படாதிருந்த ஒரு குருடன் சாலையோரத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். பெருங்கூட்டம் போய்க் கொண்டிருந்தது, அனைவரின் பார்வையும் கிறிஸ்துவின்மீது; ஒருவர் கூட அந்தப் பிச்சைக்காரனுக்கு உதவ நிற்கவில்லை.

இயேசுவைத் தவிர எவரும் முன்வரவில்லை. திரள் கூட்டத்தின் ஆரவாரத்தின் மத்தியில், கேட்பாரற்ற அவனின் அழுகையை  அவர் கேட்டார், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” என்று கிறிஸ்து கேட்டார். “ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்.” என முழு உள்ளதோடு பதில் வந்தது. இயேசு அவனை நோக்கி: “நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார் (லூக்கா 18:41-42).

கேட்பாரற்றவரைப் போலச் சிலநேரங்களில் உணர்கிறோமா? நம்மை விட முக்கியமானவர்களாகத் தோன்றுபவர்களால் நமது அழுகுரல் மூழ்கிவிடுகிறதா? உலகம் கண்டுகொள்ளாதவர்களை நம் இரட்சகர் கவனிக்கிறார். உதவிக்கு அவரை அழையுங்கள்! பிறர் நம்மைக் கடந்து செல்லும்போது, அவர் நமக்காக தம்மை நிறுத்துவார்.