ஒரு புகைப்படக் கலைஞர் ஸ்டார்லிங்ஸ் பறவைகளையும் (கருப்பு நிற சிறிய பறவை), ஆயிரக்கணக்கான இந்தப் பறவைக் கூட்டம் வானத்தில் நிகழ்த்தும் பிரமிப்பூட்டும் “மர்மரிங்ஸ்” எனப்படும் தண்ணீர்போன்ற அசைவுகளையும் படம்பிடிக்கப் பல ஆண்டுகள் செலவிட்டார். இதை விண்ணில் பார்ப்பது ஒரு அலையின் அடியில் அமர்ந்திருப்பது போன்றது அல்லது பற்பல வடிவங்களில், கலைஞர்கள் தூரிகையினால் வரையும் கண்கவர் கண்ணாடி ஓவியம் போன்று உள்ளது. டென்மார்க்கில், இந்த ஸ்டார்லிங் பறவைகளின் அனுபவத்தை பிளாக் சன் என்பார்கள். மிகவும் வியப்பூட்டுவது, இந்த பறவைகள் தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வால் நெருக்கமாக அருகருகே பறப்பதுதான்; ஒரு பறவை கூட நகர்வில் தவறினால், அவைகள் குழப்பமடைந்து, மொத்த கூட்டமும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்கவே “மர்மரிங்ஸ்” முறை. ஒரு பருந்து அவைகளில் ஒன்றை இரையாக்க இறங்கும்போது, வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த சிறிய பறவைகள் நெருக்கமான அமைப்பில் கூட்டாக நகர்கின்றன. அவை தனியாக இருந்தால் அவற்றை எளிதாகப் பருந்து வேட்டையாடிவிடும்.

நாம் தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது நல்லது. “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று பிரசங்கி கூறுகிறார். ” ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்;” (பிரசங்கி 4:9-11). நாம் தனிமைப்படுத்தப்பட்டால் எளிதாகப் பலியாகிவிடுவோம். மற்றவர்களின் ஆறுதலோ, பாதுகாப்போ இல்லாமல் பலவீனமடைவோம்.

ஆனால் கூடிவாழும்போது நண்பர்கள் மூலம் உதவிகிடைக்கிறது, நாமும் உதவுகிறோம். “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வ12) என்று பிரசங்கி கூறுகிறார். தேவன் நம்மை வழிநடத்திட,  நாம் கூடியிருப்பதே நலம்.