மன்னர் குடும்பம் அணியும் விலைமிக்க காலணிகளை அணிந்தால் எப்படி இருக்கும்? கப்பல் பணியாளர் மற்றும் செவிலியரின் மகளான ஏஞ்சலா கெல்லி அதை அறிவாள். மறைந்த மகாராணி எலிசபெத்திற்குக் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பாளராகவும் கெல்லி இருந்தார். வயதான மகாராணியின் புதிய காலணிகளை பழக்குவிப்பதற்காக, அதை அணிந்து அரண்மனை மைதானத்தைச் சுற்றி நடப்பது அவளது பொறுப்புகளில் ஒன்றாகும். அதற்குக் காரணம் இருந்தது; அவர்கள் ஒரே காலணி அளவை உடையவர்கள், மகாராணி சில நேரங்களில் அரண்மனை விழாக்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இருக்கும், கெல்லிக்கு வயதான மகாராணியின் மீதுள்ள இரக்கத்தால் இந்த அசௌகரியத்திற்கு உதவ முடிந்தது.

எலிசபெத் மகாராணிக்குத் தனிப்பட்ட முறையில் கெல்லி செய்யும் இந்தக் காரியம், கொலோசேயா் (இக்கால துருக்கியின் ஒரு பகுதி) சபைக்கு பவுல் எழுதின, ” . . .இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு ” (கொலோசெயர் 3:12) என்ற ஊக்கமான வார்த்தைகளைச் சிந்திக்கச் செய்கிறது. நம் வாழ்க்கை “அவர்மேல் கட்டப்பட்ட(தாக)” (2:6) இருக்கையில், நாம் “தேவனால் தெரிந்துகொள்ளப் பட்ட பரிசுத்தரும் பிரியருமாய்” இருப்போம் (3:12). நம்முடைய “பழைய மனுஷனை” களைந்துபோட்டு, “புதிய மனுஷனை”த் தரித்துக்கொள்ள (வ. 9-10) அவர் நமக்கு உதவுகிறார். எனவே தேவன் நம்மை நேசித்து மன்னித்ததால், மற்றவர்களை நேசிப்பவர்கள் மற்றும் மன்னிப்பவர்களாக வாழலாம் (வ.13-14).

தங்கள் அனுதின போராட்டங்களில் இரக்கம் வேண்டி, தங்களைப் புரிந்து தங்கள் “காலணிகளை” நாம் அணியும்படி தேவையிலுள்ளவர்கள் நம்மைச் சுற்றிலும் உண்டு. நாம் அவ்வாறு செய்கையில், நமக்காக எப்போதும் இரக்கத்துடன் இருக்கும் ராஜாவாம் இயேசுவின் கால்சுவடுகளில் நடக்கிறோம்.