ஒரு கோடை இரவு, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பறவைகள் திடீரென்று குழப்பமான ஓசை எழுப்பின. பாட்டுப்பறவைகள் மரங்களில் இருந்து அலறல் ஓசைகளை எழுப்பியது. ஏன் என்பதை தாமதமாகதான் உணர்ந்தோம். சூரியன் மறையும் போது, ஒரு பெரிய பருந்து ஒரு மரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்து வந்தது. மரத்திலிருந்து பறவைகள் ஆவேசத்துடன் சிதறி, அபாயத்திலிருந்து பறந்து செல்லும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
வேதாகமம் முழுவதும் நம் வாழ்க்கைக்கு தேவையான எச்சரிக்கைகளை விடுக்கிறது. உதாரணமாக, தவறான போதனைகளுக்கு விரோதமான எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். நாம் கேட்பதை நாம் சந்தேகிக்கக்கூடும். எவ்வாறாயினும், நம் பரலோகத் தகப்பன் நம்மீது அவருக்குள்ள அன்பின் நிமித்தம், அத்தகைய ஆவிக்குரிய ஆபத்துகளை நமக்குத் தெளிவாக்குவதற்கு வேதத்தின் தெளிவைத் தருகிறார்.
இயேசு, “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” (மத்தேயு 7:15) என்று எச்சரிக்கிறார். மேலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்… அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (வச. 16-17; 20) என்றும் எச்சரிக்கிறார்.
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (நீதிமொழிகள் 22:3) என்று நமக்கு நினைவுபடுத்துகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் தேவனுடைய பாதுகாக்கும் அன்பு மறைந்திருந்து நமக்கு அவ்வப்போது வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது.
தங்களுக்கு மாம்ச ரீதியாக ஏற்படப்போகிற ஆபத்தைக் குறித்து பறவைகள் ஒன்றையொன்று எச்சரித்ததுபோல, ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்து நம்மை எச்சரிக்கும் வேதத்தின் சத்தியங்களுக்கு நாம் செவிகொடுப்போமாக.
என்ன ஆவிக்குரிய எச்சரிக்கை உங்கள் இதயத்தில் பேசுகிறது? வேதம் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை எவ்வாறு உறுதிப்படுத்தியுள்ளது?
அன்புள்ள தேவனே, வேதம் எங்களை அன்புடன் எச்சரிக்கிறது, அதற்காய் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் இன்று அந்த வார்த்தைகளுக்கு செவிசாய்க்க உதவிசெய்யும்.