“ஸ்டார் ட்ரெக்” என்ற தொடரில் லெப்டினன்ட் உஹ_ராவாக நடித்ததற்காக நடிகை நிச்செல் நிக்கோல்ஸ் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். இந்த பாத்திரத்தில் நடித்தமைக்காக, பெரிய தொலைக்காட்சித் தொடரில் வெற்றிகரமாய் நடித்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் என்று நிக்கோலஸ் பெயர்பெற்றார். ஆனால் அதைவிட பெரிய வெற்றி வரவிருந்தது.
நிக்கோல்ஸ் உண்மையில் “ஸ்டார் ட்ரெக்” தொடரின் முதல் சீசனுக்குப் பிறகு தனது நாடகப் பணிக்குத் திரும்புவதற்காக அதில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைச் சந்தித்தார். அவர் அதிலிருந்து வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தினார். முதன்முறையாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதையும் செய்யக்கூடிய, விண்வெளிக்குச் செல்லக்கூடிய அறிவார்ந்த மனிதர்களாக தொலைக்காட்சியில் பார்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார். லெப்டினன்ட் உஹ_ரா என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக நிக்கோல்ஸ் அடைந்த அந்த பெரிய வெற்றியானது, கறுப்பின பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் என்னவாக மாறமுடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
யாக்கோபும் யோவானும் தேவனுடைய ராஜ்யத்தில் இரண்டு சிறந்த பதவிகள் வேண்டும் என்று விண்ணப்பித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது (மாற்கு 10:37). அந்த பதவிகள் அவர்களுடைய தனிப்பட்ட வெற்றிகளாய் இருந்திருக்கக்கூடும். இயேசு அவர்களின் வேண்டுகோளின் வேதனையான உண்மைகளை விளக்கியது மட்டுமல்லாமல் (வச. 38-40) அவர்களை உயர்ந்த இலக்குகளுக்கு அழைத்தார், “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (வச. 43). அவரைப் பின்பற்றுபவர்கள் தனிப்பட்ட வெற்றிகளை மட்டும் தேடவில்லை, ஆனால் அவரைப் போலவே, மற்றவர்களுக்கு சேவை செய்ய தங்கள் பதவிகளைப் பயன்படுத்துகிறவர்களாயிருப்பார்கள் (வச. 45).
நிச்செல் நிக்கோலஸ், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும் நோக்கத்துடன் அந்த ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரில் தொடர்ந்து பணியாற்றினார். நாமும் தனிப்பட்ட வெற்றியில் மட்டும் திருப்தி அடையாமல், நாம் பெறும் எந்த பதவியையும் அவருடைய நாம மகிமைக்காய் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் பயன்படுத்த பிரயாசப்படுவோம்.
உங்களின் தற்போதைய தனிப்பட்ட மற்றும் தொழில் இலக்குகள் என்ன? இப்போது நீங்கள் மற்றவர்களுக்கு என்னென்ன வாய்ப்பு கதவுகளைத் திறக்க முடியும்?
அன்புள்ள இயேசுவே, உமது நாமத்தில் மற்றவர்களுக்குச் சேவை செய்ய எனது பதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை எனக்குக் காண்பியும்.