ஒரு தபால்காரர், தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுத்த தபால்கள் அந்த பெட்டியிலிருந்து எடுக்கப்படாமல் அதிலேயே நாளுக்கு நாள் தேங்கியிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்டார். அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணி தனியாக வசித்து வருவது அவருக்கு தெரியும். அவரும் அனுதிமும் தபாலை சேகரித்துக்கொள்வார் என்பதை அறிந்திருந்த அந்த தபால்காரர், அந்தப் பெண்மணியின் அண்டை வீட்டாரில் ஒருவரிடம் அதைக் குறித்து விசாரித்தார். சந்தேகப்பட்ட அவர்கள் இருவரும், ஒரு உதிரி சாவியின் மூலம் அந்த பெண்மணியின் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவள் நான்கு நாட்களுக்கு முன்பு தரையில் மயங்கி விழுந்துகிடப்பதை கண்டறிந்தனர். அவளால் எழுந்திருக்கவோ உதவிக்கு அழைக்கவோ முடியவில்லை. தபால் ஊழியரின் ஞானமும், அக்கறையும், செயலூக்கமான செய்கையும் அவளுடைய உயிரைக் காப்பாற்றியது.
“ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” (11:30) என்று நீதிமொழிகள் கூறுகின்றன. சரியானதைச் செய்வதன் மூலமும், கடவுளுடைய ஞானத்தின்படி வாழ்வதன் மூலமும் வரும் பகுத்தறிவு நம்மை மட்டுமல்ல, நாம் சந்திப்பவர்களையும் ஆசீர்வதிக்கும். அவரையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்துகிற கனிகொடுக்கிற வாழ்க்கையானது, நல்ல மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கையாக அமையும். நம்முடைய கனிகள் மற்றவர்களை பராமரித்துக்கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையை பொருட்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது.
நீதிமொழிகளின் எழுத்தாளர் புத்தகம் முழுவதும் வலியுறுத்துவது போல, கர்த்தரை சார்ந்திருப்பதிலேயே நம்முடைய ஞானம் வெளிப்படுகிறது. “முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல” (நீதிமொழிகள் 8:11). தேவன் தரும் ஞானம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்த போதுமானது. இது நித்தியத்திற்கு நேராய் ஆத்துமாக்களை வழிநடத்தக்கூடியது.
இன்று ஒருவருக்கு உதவ ஞானத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்? நீங்கள் ஞானத்தை எவ்வளவு மதிக்கிறீர்கள்?
பரலோகத் தகப்பனே, உமது வழியையும் வழிகாட்டுதலையும் பின்பற்ற எனக்கு ஞானத்தைத் தந்தருளும். உம்முடைய வழிநடத்துதலோடு மற்றவர்களை பராமரிக்க எனக்கு உதவிசெய்யும்.