கிறிஸ்துமஸ் தினத்தின் மகிழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த நாள் கொஞ்சம் மந்தமாவதாக உணர்ந்தேன். நாங்கள் இரவு முழுவதும் நண்பர்களுடன் தங்கியிருந்தோம். ஆகையால் சரியாக தூங்கவில்லை. பின்னர் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது எங்கள் கார் பழுதடைந்தது. பின்னர் பனி பெய்யத் தொடங்கியது. நாங்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு, பனிமூட்டமான உணர்வில் டாக்ஸியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு மந்தமான உணர்வை பெற்றுக்கொண்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல. அளவுக்கு அதிகமாக உண்பதாலோ, வானொலியில் இருந்து பாடல்கள் திடீரென காணாமல் போனதாலோ, போன வாரம் வாங்கிய பரிசுப் பொருட்கள் பாதி விலையில் விற்பனையாகிவிட்டதாலோ, கிறிஸ்துமஸ் தினத்தின் மாயாஜால மகிழ்ச்சியானது விரைவில் கலைந்துவிடும்!

இயேசு பிறந்த நாளின் அடுத்த தினத்தைப் பற்றி வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் பெத்லகேமுக்கு நடைபயணமாய் வந்து, தங்குமிடமில்லாமல் அலைந்து, பிள்ளைபேறு பெற்றெடுத்த பிரசவ வலியோடு மரியாள் இருக்க, கூடியிருந்த மேய்ப்பர்கள் சொல்லாமல் கலைந்து சென்றது (லூக்கா 2:4-18) போன்ற தொடர் சம்பவங்களினால் மரியாளும் யோசேப்பும் சோர்ந்துபோயிருந்திருக்கக்கூடும் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆயினும், மரியாள் தனது பிறந்த குழந்தையைத் தொட்டிலில் வைத்து, தேவ தூதன் அவளை சந்தித்த சம்பவம் (1:30-33), எலிசபத்தின் ஆசீர்வாதம் (வச. 42-45), மற்றும் அவளுடைய குழந்தையின் மகிமையான எதிர்காலம் என்று அவைகளைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்கிறேன். மரியாள் தன் இருதயத்தில் இதுபோன்ற விஷயங்களை “சிந்தனைபண்ணினாள்” (2:19) என்று வேதம் சொல்கிறது. அது அவளுடைய அன்றைய மனச்சோர்வையும் உடல் வலியையும் குறைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை நம்முடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள், வெறுமனே கழிகிற நாளாய் இருக்கக்கூடும். ஆனால் அந்த நாட்களில் நாமும் மரியாளைப் போலவே, நம் உலகத்திற்கு வந்தவரைப் பற்றி சிந்திப்பதன் மூலம், அவருடைய பிரசன்னத்தால் நிறைவோம்.