ஆனி, வறுமையிலும் வேதனையிலும் வளர்ந்தார். அவளுடைய இரண்டு உடன்பிறப்புகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர். ஐந்து வயதில், ஒரு கண் நோய் அவளை ஓரளவு பார்வையற்றதாகவும், படிக்கவோ எழுதவோ முடியாமல் ஆக்கினது. ஆனிக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவரது தாயார் காசநோயால் இறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவளை துஷ்பிரயோகம் செய்த அவளது தகப்பனார், மூன்று குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுவிட்டார். இளைய பிள்ளை வேறு உறவினர்களுடன் தங்கிக்கொள்வதற்கு அனுப்பப்பட்டது. ஆனியும் அவளது சகோதரரும் அரசு நடத்தும் அனாதை இல்லத்திற்குச் சென்றனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஜிம்மியும் இறந்துவிட்டான்.
பதினான்கு வயதில், ஆனியின் சூழ்நிலைகள் பிரகாசமாகின. அவள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் பார்வையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொண்டு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாள். அவள் அந்த இடத்தில் வாழ்வதற்கு சிரமப்பட்டாலும், அவள் கல்வியில் சிறந்து விளங்கி, வாலிடிக்டோரியனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஹெலன் கெல்லரின் ஆசிரியை மற்றும் தோழியான ஆனி சல்லிவன் என இன்று நாம் அவளை நன்கு அறிவோம். முயற்சி, பொறுமை மற்றும் அன்பின் மூலம், ஆனி பார்வையற்ற மற்றும் காது கேளாத ஹெலனுக்கு பேசவும், பார்வையற்றோருக்கான பிரெய்லி படிக்கவும், கல்லூரியில் பட்டம் பெறவும் கற்றுக் கொடுத்தார்.
யோசேப்பும் தன் வாழ்க்கையில் பல சோதனைகளை கடக்க வேண்டியிருந்தது. பதினேழாவது வயதில், அவர் மீது பொறாமைப்பட்ட சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டார். பின்னர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் (ஆதியாகமம் 37:39-41). ஆயினும் எகிப்து தேசத்தையும் அவனது சொந்த குடும்பத்தாரையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற தேவன் அவனைப் பயன்படுத்தினார் (50:20).
நாம் அனைவரும் சோதனைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். ஆனால் யோசேப்பு மற்றும் ஆனி ஆகியோருக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த தேவன் உதவியது போல, நமக்கும் உதவிசெய்து நம்மை பயன்படுத்த அவரால் கூடும். உதவிக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் அவரை சார்ந்துகொள்வோம். அவர் நம்மை பார்க்கிறார், கேட்கிறார்.
சோதனையின் மூலம் தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவிசெய்தார்? இன்னொருவரின் போராட்டத்தில் உங்களால் எப்படி உதவ முடிந்தது?
அன்புள்ள தேவனே, உமக்கு நன்றி! சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள எனக்கு உதவிசெய்தீர். மற்றவர்களுக்கு உதவியாளராக இருக்க எனக்கு உதவிசெய்யும்.