1951 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டாலினின் மருத்துவர், அவரது உடல்நிலையைப் பாதுகாப்பதற்காக அவரது பணிச்சுமையைக் குறைக்குமாறு அறிவுறுத்தினார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியாளர், அந்த மருத்துவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அவரை கைது செய்தார். பொய்களால் பலரை ஒடுக்கிய கொடுங்கோலன் உண்மையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் வழக்கம்போல, உண்மையைச் சொல்கிறவர்களை பணியை விட்டு அகற்றினார். ஆனால் உண்மை கடைசியில் வென்றது. ஸ்டாலின் 1953இல் இறந்தார்.
எரேமியா தீர்க்கதரிசி, தனது துணிகரமான தீர்க்கதரிசனங்களுக்காக கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார் (எரேமியா 38:1-6; 40:1). அவர் எருசலேமுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை யூதாவின் ராஜாவிடம் கூறினார். “நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும். அப்பொழுது… உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” (எரேமியா 38:20) என்று அவர் சிதேக்கியா ராஜாவிடம் கூறினார் (38:20). நகரைச் சூழ்ந்திருக்கும் இராணுவத்திடம் சரணடையத் தவறினால், அது நிலைமையை மோசமாக்கும். “உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள். நீரும் அவர்கள் கைக்கு தப்பிப்போகாமல்…” (வச. 23) என்று எரேமியா எச்சரிக்கிறார்.
அந்த உண்மையைச் செயல்படுத்த சிதேக்கியா தவறிவிட்டார். இறுதியில் பாபிலோனியர்கள் யூதேயாவின் ராஜாவைப் பிடித்து, அவனது குமாரர்கள் அனைவரையும் கொன்று, நகரத்தை தீக்கிரையாக்கினர் (அதி. 39).
ஒரு வகையில், ஒவ்வொரு மனிதனும் சிதேக்கியாவின் இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறான். பாவம் மற்றும் தவறான தீர்மானங்கள் என்ற நமது சொந்த வாழ்வின் சுவர்களுக்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். பெரும்பாலும், நம்மைப் பற்றிய உண்மையைச் சொல்பவர்களைத் தவிர்ப்பதன் மூலம் விஷயங்களை மோசமாக்குகிறோம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொன்னவரின் சித்தத்திற்கு நாம் சரணடைவது மட்டுமே நம்முடைய அடிப்படை தேவை.
உங்கள் வாழ்க்கைத் தேர்வுகள் இயேசுவின் போதனைகளுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன? அவரிடம் சரணடைவதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?
இரக்கமுள்ள தேவனே, உம்மிடமிருந்து என்னை விலக்கி வைக்கும் என்னுடைய பெருமையை மன்னியுங்கள்.