“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள்.
காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது.
காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5).
ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தின விசேஷம் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தது. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).
உங்கள் இருதயத்திலும் வாழ்க்கையிலும் பிசாசின் கிரியையை இயேசு எப்படி அழித்தார்? அவரிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?
இயேசுவே, பிசாசின் வஞ்சகத்திலிருந்து என்னை விடுவியும். பாதுகாக்கும் தேவனே, உமக்காக வாழ எனக்கு அருள் செய்யும்.