ஒரு குழந்தை அழுகிறதென்றால், அது களைப்பாய் இருக்கிறது அல்லது அதற்கு பசிக்கிறது என்று அர்த்தமல்லவா? பிரவுன் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகைகளில் உள்ள நுட்பமான வேறுபாடுகள் மற்ற பிரச்சினைகளுக்கு முக்கியமான தடயங்களை கொடுக்கக்கூடும். குழந்தையின் மைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை அறிய, அவைகளின் அழுகுரலில் இருக்கும் சுருதி, ஓசை ஆகியவைகளை அடிப்படையாய் வைத்து கணினியின் துணையோடு கண்டறியும் மருத்துவ செயல்பாடுகள் அமுலில் உள்ளது. 

தேவன் தம்முடைய ஜனங்களின் வித்தியாசமான கூக்குரலைக் கேட்டு, அவர்களுடைய இருதயத்தின் நிலையைத் தீர்மானிப்பார் என்றும் கிருபையுடன் அவர்களுக்கு இரங்குவார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். யூதேயா, தேவனிடம் ஆலோசனைக் கேட்பதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடியது (ஏசாயா 30:1-7). அவர்கள் தொடர்ந்து தேவனிடத்தில் முரட்டாட்டம் செய்தால், தேவன் அவர்களுக்கு தோல்வியையும் அவமானத்தையும் கொண்டுவருவதாக எச்சரிக்கிறார். இருப்பினும், அவர்களின் “கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்க” (வச. 18) தீர்மானித்தார். அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்பி விசுவாசத்துடன் மன்றாடி கதறினாலொழிய அவர்களுக்கு மீட்பு வராது. கர்த்தருடைய ஜனங்கள் அவரிடத்தில் கதறி அழும்போது, அவர் அவர்களுடைய பாவத்தை மன்னித்து அவர்களின் ஆவிக்குரிய வலிமையை புதுப்பிப்பார் (வச. 8-26). 

இதே விஷயம் இன்று கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பொருந்தும். நம்முடைய மனந்திரும்புதலின் கதறல் சத்தத்தை பரலோகப் பிதா கேட்கும்போது, அவர் நம்மை மன்னித்து, அவர் மீதான நம்முடைய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் புதுப்பிக்கிறார்.