பெஞ்சுகளை உருவாக்குவது ஜேம்ஸ் வாரனின் வேலை அல்ல. இருப்பினும், டென்வரில் பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண் மண்ணில் அமர்ந்திருப்பதைக் கவனித்தபோது, பெஞ்சை செய்ய ஆரம்பித்தான். மக்கள் கீழே அமர்ந்திருப்பது கண்ணியமற்றது என்று வாரன் கவலைப்பட்டான். எனவே, இருபத்தெட்டு வயதான அவன், சில பழைய மரங்களைக் கண்டுபிடித்து, ஒரு பெஞ்சைக் கட்டி, பேருந்து நிறுத்தத்தில் வைத்தான். அது விரைவில் பழகிவிட்டது. தனது நகரத்தில் உள்ள ஒன்பதாயிரம் பேருந்து நிறுத்தங்களில் இருக்கைகள் இல்லாததை உணர்ந்த அவன், மற்றொரு பெஞ்சை உருவாக்கினான், பின்னர் அதுபோன்று பல இருக்கைகளை உருவாக்கி, அதில் “கனிவோடு இருங்கள்” என்று பொறித்து வைக்க ஆரம்பித்தான். அவனது இலக்கு? “என்னால் முடிந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை முறையை சற்று மேம்படுத்த எண்ணினேன்” என்று பதிலளித்தானாம். 

அந்த செயலையே “இரக்கம்” என்றும் சொல்லலாம். இயேசு நடைமுறைப்படுத்தியபடி, இரக்கம் என்பது மிகவும் வலுவான ஒரு உணர்வு, அது மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நம்மை வழிநடத்துகிறது. அவிசுவாசமான ஜனங்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தபோது, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி” (மாற்கு 6:34) அவர்களுக்கு உபதேசித்தார். அங்கிருந்த வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதினிமித்தம் அவர் அந்த இரக்கத்தை செயல்படுத்தத் துவங்கினார் (மத்தேயு 14:14). 

நாமும் “உருக்கமான இரக்கத்தை” தரித்துக்கொள்வோம் (கொலோசெயர் 3:12) என்று பவுல் வலியுறுத்துகிறார். அதன் பயன்கள்? “அது என்னுடைய சக்கரத்தில் காற்றை நிரப்புவதுபோல் என்னை நிரப்புகிறது” என்ற வாரன் சொல்லுகிறார். 

நம்மை சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் தேவைகள் இருக்கிறது. அதை தேவன் நம் கவனத்திற்கு கொண்டுவருகிறார். அந்த தேவைகள் நம்முடைய இரக்கத்தை செயல்படுத்தவும் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும் தூண்டுகிறது.