ஆயிரக்கணக்கான உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் போரிலிருந்து தப்பி பெர்லினின் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்கள் ஒரு ஆச்சரியத்தை எதிர்கொண்டனர். ஜெர்மன் குடும்பங்கள் அகதிகளுக்கு ஆதரவளிப்பதாக தங்கள் கைகளினால் எழுதப்பட்ட வாசகங்களை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். “இரண்டு பேரை உபசரிக்க முடியம்” என்று ஒரு அடையாளம் வாசிக்கப்பட்டது. “பெரிய அறை இருக்கிறது” என்று இன்னொரு வாசகம் தென்பட்டது. அந்நியர்களுக்கு ஏன் இத்தகைய உபசரிப்பு வழங்குகிறீர்கள் என்று ஒரு பெண்ணை கேட்டதற்கு, அவள், நாசிசவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் போது தனது தாய்க்கு அடைக்கலம் தேவைப்பட்டதாகவும், அத்தகைய தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும் அவள் கூறினாள்.
உபாகமத்தில், தேவன் வெகுதொலைவிலிருந்து வரும் அயலகத்தார்களை உபசரிக்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏன்? ஏனென்றால் “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (10:18). மேலும் அவர்களைப் பார்த்து, “எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19) என்றும் அறிவுறுத்துகிறார். அவர்களை பட்சாதாபத்துடன் பராமரிக்கும்படிக்கு தூண்கிறார்.
ஆனால் அதற்கு மறுபக்கமும் இருக்கிறது. ஆபிரகாம் தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டதுபோல (ஆதியாகமம் 18:1-5), சாரிபாத் விதவை எலியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 17:9-24). தேவன் விருந்தினர்களை ஆசீர்வதிப்பதற்காக அல்லாமல், அவர்களை உபசரிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதையே அதிகம் விரும்புகிறார்.
ஒரு புதிய நபரை உங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பது என்பது கடினமானது. ஆனால், அந்த ஜெர்மானிய குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாமும் பெலவீனமானவர்கள் மீது அக்கறைகொள்ளும்போது, அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரராக முடியும்.
தேவன் ஏன் திக்கற்றவர்களையும் விதவைகளையும் அதிகமாய் பொருட்படுத்துகிறார் என்று எண்ணுகிறீர்கள்? இந்த வாரத்தில் பெலவீனமான ஒரு அந்நியரை நீங்கள் எவ்விதம் உபசரிக்கப்போகிறீர்கள்?
அன்பான தேவனே, திக்கற்றவர்கள் விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களை உபசரிக்க எண்ணும் உம்முடைய இருதயத்தை எனக்கு தந்தருளும்.