என்னுடைய சிநேகிதி மிச்செல் என் மகளுக்கு குதிரை ஏற்றம் கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை லாயத்தில் இருந்த தோல் மற்றும் வைக்கோல் வாசனை காற்றில் வந்தது. மிச்செலின் வெள்ளைக் குதிரையின் வாயில் எப்படி கயிற்றின் வளையத்தைப் பொறுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை வாயை திறந்து காண்பித்தது. அதன் காதுகளுக்கு மேல் கடிவாளத்தை இழுத்தபோது, குதிரையை மெதுவாக நகர்த்துவதற்கும் இடது அல்லது வலது பக்கம் அதை இயக்குவதற்கும் அனுமதித்ததால், அந்த கடிவாளத்தில் இருக்கும் அந்த வளையம் மிகவும் முக்கியமானது என்று மிச்செல் விளக்கினார்.
குதிரையின் வாயோராமாய் இருக்கும் அந்த வளையம் மனிதனின் நாக்கைப் போன்று முக்கியமானது. இரண்டும் பெரிய ஒன்றை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. அந்த சிறு கடிவாள வளையம் குதிரையையும், சிறிய நாக்கு மனிதனின் வார்த்தைகளையும் கட்டுப்படுத்துகிறது (யாக்கோபு 3:3,5).
நம்முடைய வார்த்தைகள் அனைத்து திசைகளுக்கும் தீவிரமாய் பரம்பும். “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்” (வச. 9). ஆனால், வார்த்தைகள் இருதயத்திலிருந்து புறப்படுவதால், நாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று வேதம் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது (லூக்கா 6:45). ஆனால் நமக்கும் வாசமாயிருக்கும் கர்த்தருடைய ஆவியானவர், பொறுமை, நற்குணம், இச்சையடக்கம் ஆகிய ஆவியின் சுபாவங்களில் வளருவதற்கு நமக்கு உதவிசெய்கிறார் (கலாத்தியர் 5:22-23). ஆவியானவரோடு நாம் ஒத்துழைத்தால், நம்முடைய இருதயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அது நம்முடைய வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறது. வீணான வார்த்தைகள் துதியின் சத்தமாய் மாறுகிறது. பொய்யானது சத்தியமாய் மாறுகிறது. விமர்சன உதடுகள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச எத்தனிக்கிறது.
நாவை அடக்குவது என்பது சரியான வார்த்தைகளை பேசுவதற்கான பயிற்சி மட்டுமன்று. அது ஆவியானவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, உலகத்திற்கு தேவையான தயவும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் நம்மிலிருந்து பிறப்பிக்கச் செய்யும் ஆவியானவருடைய கிரியை.
உங்களுடைய வார்த்தைகளின் மூலம் வெளியரங்கமாகும் உங்களுடைய உள்ளான சுபாவம் என்ன? ஆவியானவரோடு நடக்கும் அனுபவம் எவ்விதம் உங்களுடைய பேச்சை மாற்றும்?
அன்பான தேவனே, மற்றவர்களையும் உம்மையும் கனப்படுத்தும் விதத்தில் என்னுடைய வார்த்தைகள் இருக்கும்பொருட்டு என்னுடைய இருதயத்தை மாற்றும்.