“இன்று காலையில் பணத்திற்கு பெரிய மதிப்பு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என்னிடத்தில் ஒரு டாலர் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” முன்னாள் அமெரிக்க அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தனது வாழ்நாள் சேமிப்பை ஒரு வியாபார கூட்டாளியின் மோசடியால் மொத்தமாய் இழந்தபோது இவ்வார்த்தைகளை கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு, கிராண்டிற்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாய் உதவுவதற்கு தீர்மானித்த அவர், அவரது நினைவுக் குறிப்புகளை எழுதி வெளியிடுவதற்காக எழுத்தாளர் மார்க் ட்வைன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதை முடித்தார்.

கடுமையான கஷ்டங்களைச் சந்தித்த மற்றொரு நபரைப் பற்றி வேதம் நமக்குச் சொல்கிறது. யாக்கோபு தனது மகன் யோசேப்பை “துஷ்டமிருகம்.. பட்சித்துப்போட்டது” (ஆதியாகமம் 37:33) என்று நம்பினார். பின்னர் அவரது மகனான சிமியோன் அந்நிய தேசத்தால் சிறைபிடிக்கப்பட்டான். மேலும் தன்னுடைய குமாரனான பென்யமீனும், தன்னிடத்திலிருந்து போய்விடுவானோ என்று யாக்கோபு அஞ்சினார். “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” என்று சொல்லி கதறுகிறார் (42:36). 

ஆனால் அவர் எண்ணியது தவறு. அவருடைய குமாரனாகிய யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்பதையும், தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தேவன் திரைக்கு பின்னாலிருந்து செயல்படுகிறார் என்பதையும் பின்னர் அறிகிறார். நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய கரத்தை பார்க்கமுடியாவிட்டாலும், தேவனை ஏன் நம்பவேண்டும் என்பதை இக்கதை நமக்கு வலியுறுத்துகிறது. 

அமெரிக்க அதிபர் கிராண்டின் நினைவுக் குறிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் அவருடைய குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தனர். அதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடில்லையெனினும், அவருடைய மனைவி அதை நேர்த்தியாய் அனுபவிக்க நேர்ந்தது. நம்முடைய பார்வை குறைவுள்ளது. ஆனால் தேவனுடைய பார்வை அப்படியில்லை. இயேசு நம்முடைய நம்பிக்கையாய் இருக்கும்போது, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). அவர் மீது நம்முடைய நம்பிக்கையை இன்று வைப்போம்.