நான் அயர்லாந்திற்குச் சென்றபோது, மூன்று இலைகள் கொண்ட ஏராளமான அலங்கார ஷாம்ராக்ஸைக் கண்டு வியந்தேன். அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகள், தொப்பிகள், நகைகள் என்று எல்லாவற்றிலும் இந்த சிறிய பச்சை இலைகளின் வடிவங்கள் தென்பட்டது.
அயர்லாந்து முழுவதும் பிரபலமாயிருக்கும் ஒரு தாவரம் என்பதைக் காட்டிலும், இந்த ஷாம்ராக்ஸ்கள் பல தலைமுறைகளுக்கு திரித்துவத்தை பிரதிபலிக்கும் எளிமையான வழிமுறையாக இருந்துள்ளது. திரித்துவம் என்பது ஒரே கர்த்தர்த்துவத்துக்குள் இருக்கும் மூன்று நபர்களை பிரதிபலிக்கிறது: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். திரித்துவத்தை விளக்கும் அனைத்து மனித முயற்சிகளும் போதுமானதாக இல்லாதபட்சத்தில், மூன்று இலைகளால் ஆன இந்த தாவரத்தை வைத்து அதை புரிந்துகொள்ளும் முயற்சி பயனுள்ளதாய் இருக்கிறது.
திரித்துவம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் இடம்பெறவில்லை. ஆனால் திரித்துவத்தின் மூன்று நபர்களும் ஒருசேர இடம்பெறும் ஒரே சம்பவம் வேதாகமத்தில் இருக்கிறது. தேவ குமாரனாகிய இயேசு ஞானஸ்நானம் எடுக்கும் வேளையில், பரிசுத்த ஆவியானவர் வானத்திலிருந்து புறாவைப்போல இறங்கிவர, பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய தேவன் “நீர் என்னுடைய நேசக்குமாரன்” (மாற்கு 1:11) என்று சத்தமிடுவதைப் பார்க்கமுடியும்.
அயர்லாந்து மக்கள் தேவனைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்க இந்த ஷாம்ராக்ஸ் தாவரத்தை உதாரணமாய் பயன்படுத்திக்கொள்கின்றனர். திரித்துவத்தைக் குறித்து நாம் இன்னும் ஆழமாய் அறிந்துகொள்ளும்போது, தேவனைக் குறித்த நம்முடைய அறிவு விஸ்தாரமாக்கப்பட்டு, “ஆவியோடும் உண்மையோடும்” (யோவான் 4:24) அவரை நாம் தொழுதுகொள்ளச் செய்கிறது.
திரித்துவத்தை புரிந்துகொள்ள எந்த உதாரணம் உங்களுக்கு உதவுகிறது? தேவன் ஒருவரே என்பதை விசுவாசிப்பது ஏன் அவசியமாகிறது?
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர், மூவரும் ஒன்றாக செயல்பட்டு தங்கள் அன்பை பிரதிபலித்து மக்களின் இரட்சிப்புக்காய் பிரயாசப்படுகின்றனர் என்று நான் விசுவாசித்து உம்மை தொழுதுகொள்ளுகிறேன்.