“என்னை சுத்தம் செய்!” என்ற வார்த்தைகள் எனது வாகனத்தில் எழுதப்படவில்லை என்றாலும், என் வாகனம் அதை வெளிப்படுத்தியது. எனவே, நான் கார் கழுவும் இடத்திற்குச் சென்றேன். சமீபத்திய பனிப்பொழிவின் காரணத்தினால், உப்பு நீர் நிறைந்த சாலைகளில் இருந்த மோசமான அசுத்தங்களிலிருந்து நிவாரணம் பெற விரும்பும் பிற ஓட்டுநர்களும் வந்து தங்கள் வாகனங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு முன்பே நீளமான வரிசையில் வாகனங்கள் சுத்தப்படுத்தப்படுவதற்காக இருந்தன. சேவையோ மெதுவாக இருந்தது. ஆனால் அக்காத்திருப்பு நல்லது. நான் ஒரு சுத்தமான வாகனத்துடன் புறப்பட முடிந்தது. சேவை தாமதத்தின் காரணமாக, கார் சுத்தம் செய்ததற்கான பணமும் இலவசமாக்கப்பட்டது!

வேறொருவரின் செலவில் சுத்தம் செய்யப்பட்டது. இதுதான் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி. தேவன், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம் பாவங்களுக்கு மன்னிப்பை வாங்கித்தந்தார். வாழ்க்கையின் “அழுக்கு மற்றும் கறைகள்” நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது “குளிப்பதன்” அவசியத்தை நம்மில் யார் உணராமல் இருக்கிறோம்? எப்பொழுது நம் சுயநல எண்ணங்கள், பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள் தேவனுடனான நம் அமைதியைப் பறித்திருக்கிறது? தாவீது சங்கீதம் 51ல், சோதனை தன்னை மேற்கொண்டபோது அவர் அழுததை குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய ஆலோசகர் தேவனுக்கு விரோதமான அவர் பாவத்தை அவருக்கு உணர்த்தியபோது (2 சாமுவேல் 12 பார்க்கவும்), அவரது தேவனிடம் “என்னை சுத்திகரியும்”என ஜெபிக்கிறார்: ”நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” (வ. 51:7).. உங்களிடம் பாவம் மற்றும் குற்ற உணர்வு இருக்கிறதா? இயேசுவிடம் உங்கள் வழியைச் செவ்வைப்படுத்தி, இவ்வசனத்தை நினைவில் வையுங்கள்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (I யோவான் 1:9).