வீட்டு முகவர் ஒருவர், சுழல் படிக்கட்டு முதல் விரிந்த படுக்கையறை வரை, பளிங்கு தரையிலிருந்து பட்டு விரிப்பு வரை, பிரமாண்டமான சலவை அறை முதல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகம் வரை இளம் தம்பதியினருக்கு ஏற்ற ஓர் வீட்டைக் காட்டினார். அவர்கள் திரும்பிய ஒவ்வொரு மூலையிலும் அவ்வீட்டின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “எங்களுக்கு சிறந்த இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள். இந்த வீடு மிகவும் நன்றாக இருக்கிறது!” என்றனர். அதற்கு வீட்டு முகவர், “உங்கள் பாராட்டுக்களை நான் இதை கட்டினவருக்கு தெரிவிக்கிறேன். வீட்டைக் கட்டியவராகிய அவர்தான் பாராட்டுக்குரியவர், வீடோ அதை உங்களுக்குக் காட்டின நானோ அல்ல” என பதிலளித்தார். இது சற்று விசித்திரமாக இருந்தாலும், அது தான் உண்மை.
வீட்டு முகவரின் இந்த வார்த்தைகள் எபிரெய எழுத்தாளரை எதிரொலித்தது. “வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்” (வச. 3:3).. எபிரெய நிருபத்தின் எழுத்தாளர் தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மைத்தன்மையை, தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் (வச. 1-6). மோசே தேவனிடம் நேருக்கு நேர் பேசுவதற்கும், அவருடைய உருவத்தைக் காண்பதற்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் (எண்ணாகமம்12:8), அவர் தேவனுடைய வீட்டில் “ஒரு பணிவிடைக்காரனாய்” மட்டுமே இருந்தார் (எபிரெயர் 3:5). கிறிஸ்துவே படைப்பாளர் (1:2, 10). ஆவிக்குரிய “எல்லாவற்றையும் கட்டுபவர்” மற்றும் “தேவனின் வீட்டில்” குமாரன் (3:4, 6) என்ற மரியாதைக்குத் தகுதியானவர். தேவமக்களாகிய நாம்தான் அவருடைய வீடு.
நாம் தேவனை உண்மையாகச் சேவிக்கும்போது, நமது ஆவிக்குரிய ஜீவியத்தைக் கட்டி எழுப்புகிறவராகிய இயேசுவே அந்த கனத்திற்குத் தகுதியானவர். தேவனின் வீடாகிய நாம் பெறும் எந்தப் புகழும் அவருக்கே உரியதாகும்.
தேவன் உங்களுக்குள் எதைக் கட்டியெழுப்பினார்? நீங்கள் பாராட்டப்பட்டால், அதை இயேசுவுக்கே கொடுப்பதற்கான உங்கள் தனித்துவமான வழிமுறைகள் யாவை?
இயேசுவே, நீர் எனது எல்லாப் புகழுக்கும் தகுதியானவர். இந்நாளில் என் வாழ்வும், வார்த்தைகளும் உமக்கு மட்டுமே புகழைத் தரட்டும்.