ஓய்வு பெற்ற ஆசிரியை டெபி ஸ்டீபன்ஸ் ப்ரோடர், முடிந்தவரை மரங்களை நடுவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். அதற்கு காரணம்? வெயிலின் உஷ்ணம். தட்பவெப்ப நிலை சார்ந்த காரணங்களை வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவில் பெரும்பாலானோரின் இறப்புக்கு உஷ்ணமே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. “நான் மரங்களை நடுவதிலிருந்து துவங்குகிறேன்” என்று அந்த பிரச்சினைக்கு அவர் தீர்வளிக்கிறார். சமுதாயத்தை வெயிலின் உஷ்ணத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய தீர்வு மரங்களே. “இது சமுதாயத்தை அழகாக்கும் முயற்சியல்ல; மாறாக, வாழ்வா சாவா என்னும் போராட்டம்” என்று அவர் சொல்லுகிறார்.
நிழல் என்பது வெறும் புத்துணர்வூட்டக்கூடிய காரியம் மட்டுமல்ல; அது உயிரைக் காப்பாற்றக்கூடியது என்பதை 121ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் அறிந்திருந்தான். மத்திய கிழக்கில், சூரிய ஒளியின் ஆபத்து அதிகமாயிருக்கும். “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை” (வச. 6) என்று தேவனுடைய பாதுகாப்பை விவரிக்கும் சங்கீதக்காரன், தேவனே நம்முடைய ஆபத்துக்காலத்தின் அடைக்கலப்பட்டணம் என்பதை இந்த ஒப்புமையின் மூலம் விவரிக்கிறார்.
இந்த வேதவாக்கியம், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு வலியோ வேதனையோ இல்லை என்று சொல்லவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33) என்றே இயேசு சொல்லுகிறார். ஆனால் நிழல் என்ற இந்த உருவகத்தின் மூலம், நம்முடைய பாதையில் குறுக்கிடுவது எதுவாக இருப்பினும் தேவன் நம்மை அதிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 121:7-8). அந்த இடத்தில் அவரை நம்புவதின் மூலமும், அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது என்று அறிவதின் மூலமும் நாம் இளைப்பாறுதலை அடையமுடியும் (யோவான் 10:28; ரோமர் 8:39).
தேவனுடைய பராமரிப்பில் ஜீவனை பாதுகாக்கும் நிழலை நீங்கள் எப்படி அனுபவித்தீர்கள்? அவருடைய பாதுகாப்பில் இருக்கிறீர்கள் என்பதை நினைவுகூருவது எவ்விதத்தில் உங்களை தைரியமூட்டுகிறது?
அன்பான தேவனே, எனக்கு நிழலாகவும் அடைக்கலமாகவும் இருப்பதற்காய் உமக்கு நன்றி. உம்மை பற்றுகிற விசுவாசத்தில் நான் வளரும்போது, இளைப்பாறுதலையும் தைரியத்தையும் அடைவதற்கு எனக்கு உதவிசெய்யும்.