நான் சமீபத்தில் ஒரு பயனுள்ள வார்த்தையைக் கண்டறிந்தேன்: “குளிர்காலம்.” இயற்கை உலகின் பெரும்பகுதியை இந்த குளிர்காலம் அமைதிப்படுத்துவது போல, வாழ்க்கையின் “குளிர்” பருவங்களில் ஓய்வெடுக்கவும், குணமடையவும் வேண்டியதன் அவசியத்தை விவரிக்க, எழுத்தாளர் கேத்தரின் மே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையை நான் இழந்த பிறகு இந்த ஒப்புமை எனக்கு உதவியாயிருந்தது. இது எனது ஆற்றலை பல மாதங்கள் புதுப்பித்தது. இந்த குளிரானது வலுக்கட்டாயமாய் என் வேகத்தைக் குறைத்ததால் கோபமடைந்த நான், எனது குளிர்காலத்தை எதிர்த்துப் போராடினேன். கோடைக்கால வாழ்க்கை திரும்ப வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருந்தது.
பிரசங்கி, “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லுகிறார் (3:1-4). நடவும் நட்டதை பிடுங்கவும், அழவும் நகைக்கவும், புலம்பவும் நடனம் பண்ணவும் ஒவ்வொரு காலமுண்டு. இந்த வேதவாக்கியத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் குளிர்காலத்தில் தான் அதன் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவர்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்றாலும், ஒவ்வொரு பருவமும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும், அதன் வேலை முடிந்ததும் கடந்து போகும். அது என்னவென்று நம்மால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவன் அவற்றின் மூலமாக நம்மில் கிரியை செய்கிறார் (வச. 11). என் துக்கநாட்கள் இன்னும் முடியவில்லை. அது முடியும்போது நான் நடனம்பண்ணும் காலம் வரும். தாவரங்களும் விலங்குகளும் குளிர்காலத்தை எதிர்த்துப் போராடாதது போல, நானும் அதை எதிர்த்துபோராட வேண்டியதில்லை. அது அதனுடைய வேலையை செய்வதற்கு அதை முழுமையாய் அனுமதிக்கவேண்டும்.
ஒரு சிநேகிதன், “கர்த்தாவே, உம்முடைய நற்கிரியைகளை இந்த காலத்தில் ஷெரிடனுக்குள் செய்வீர்களா?” என்று சொல்லி எனக்காக ஜெபித்தான். அது என்னுடைய ஜெபத்தைக் காட்டிலும் சிறந்த ஜெபம். தேவனுடைய கரத்தில் காலங்கள் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் அவருடைய புதுப்பிக்கும் கிரியைகளை காண நம்மை அர்ப்பணிப்போம்.
உங்களுடைய எந்த காலம் அது நியமிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பதாகவே முடியவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்? தேவன் இந்த காலத்தில் உங்களுக்குள் என்ன கிரியை நடப்பிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
தகப்பனே, அனைத்து கால சூழ்நிலைகளையும் உம்முடைய நாம மகிமைக்காகவும் என்னுடைய நன்மைக்காகவும் உகந்ததாய் மாற்றுவதற்காய் உமக்கு நன்றி.