கி.பி. 155 இல், ஆதித்திருச்சபையின் தந்தையான பாலிகார்ப், கிறிஸ்துவை விசுவாசித்ததினால் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதாக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பாலிகார்ப் அவர்களிடம், “எண்பத்தாறு ஆண்டுகளாக நான் அவருடைய ஊழியக்காரனாக இருந்தேன்; அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. என்னைக் காப்பாற்றிய என்னுடைய ராஜாவை இப்போது நான் எப்படி நிந்திக்க முடியும்?” என்று பதிலளித்தாராம். நம் ராஜாவாகிய இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் கடுமையான சோதனையை எதிர்கொள்ளும்போது, பாலிகார்ப்பின் இந்த பதில் நமக்கு உத்வேகமாக இருக்கும்.
இயேசுவின் மரணத்திற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பாக, பேதுரு துணிச்சலாக, “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” (யோவான் 13:37) என்று சொல்லுகிறான். பேதுரு தன்னை அறிந்ததைக் காட்டிலும், பேதுருவை நன்கு அறிந்த இயேசு அவனைப் பார்த்து, “சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வச. 38) என்றார். ஆனாலும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பாக, இயேசுவை மறுதலித்த அதே பேதுரு அவரை மகிமைப்படுத்தும் விதமாக, தன்னுடைய ஜீவனையே கொடுக்கிறான் (21:16-19).
நீங்கள் பாலிகார்ப்பா? அல்லது பேதுருவா? சிலவேளைகளில் நம்மில் பெரும்பாலானோர் பேதுருவைப் போல துணிச்சல் இல்லாமல், கிறிஸ்துவின் விசுவாசியாய் செயல்படாமல் கோழையாக இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் வகுப்பறையில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், எங்கிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை. அதுபோன்ற தோல்விகள் நமக்கு நேரிடும்போது, நமக்காக மரித்து இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிற இயேசுவிடம் ஜெபத்தில் அணுகுவோம். அவர் நமக்கு உண்மையுள்ளவராய் வெளிப்பட்டு, கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருக்காக துணிச்சலாய் நிற்க கிருபை செய்வாராக.
இயேசுவுக்காய் துணிச்சலாய் செயல்பட அதிக ஊக்கம் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறது? அவருக்காய் சாட்சியாய் நிற்பது எந்தவிதத்தில் உங்களுக்கு உறுதுணையாயிருக்கிறது?
பரலோகப் பிதாவே, நான் பயந்து பின்வாங்கி, உம்மை வார்த்தைகளாலும் கிரியைகளாலும் மறுதலிக்கும்வேளைகளில் என்னை மன்னியும். நான் ஒரு துணிச்சலுள்ள கிறிஸ்தவனாய் வாழ்வதற்கு உம்முடைய பெலன் எனக்கு தேவை.