“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?”
116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார்.
கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.
அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.
நீங்கள் தனிமையில் இருக்கும்போதோ அல்லது கைவிடப்பட்டதாக உணரும்போதோ என்ன செய்வீர்கள்? உங்கள் அழுகுரலைக் கேட்டு இரங்குகிற தேவனிடத்தில் என்ன கேட்பீர்கள்?
தகப்பனே, என்னுடைய இருதயத்தின் அழுகுரலை எப்போதும் கேட்கிறதற்காய் உமக்கு நன்றி. உம்முடைய உதவியும் பிரசன்னமுமே என்னுடைய இளைப்பாறுதல்.