மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது. 

பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16). 

கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.