ஒரு பெண் ஒருமுறை என்னிடம் ஒரு கருத்து வேறுபாடு தன் தேவாலயத்தை இரண்டாய் கிழித்தது என்று சொன்னாள். “எதில் கருத்து வேறுபாடு?” என்று நான் கேட்டேன். “பூமி தட்டையாக இருக்கிறதா?” என்னும் விவாதத்தினால் என்று பதிலளித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு உணவகத்தின் பின் அறையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறி ஒரு மனிதன் தன் கையில் ஆயுதம் எந்தி உள்ளே வந்தார் என்னும் செய்தியைப் படித்தேன். ஆனால் அந்த உணவகத்திற்கு பின்பு எந்த அறையும் இல்லை. ஆகையால் அந்த மனிதனை கைது செய்தனர். இந்த இரண்டு சம்பவத்திலும், மக்கள் இணையதளத்தில் இடம்பெறக்கூடிய சர்ச்சைக்குரிய காரியங்களைப் பார்த்துவிட்டு இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். 

கிறிஸ்தவர்கள் மெய்யான குடிமக்கள்களாய் வாழ்வதற்காய் அழைக்கப்படுகின்றனர் (ரோமர் 13:1-7). நல்ல குடிமகன்கள் தவறான செய்திகளைப் பரப்புவதில்லை. லூக்காவின் நாட்களில் இயேசுவைக் குறித்து பல கதைகள் உலாவந்தன. அவற்றுள் சிலவைகள் உண்மையற்றவைகள் (லூக்கா 1:1). தான் கேட்ட அனைத்து செய்திகளையும் அப்படியே தொடர்புகொள்ளாமல், லூக்கா அவற்றை தீர்க்கமாய் ஆராய்ச்சி செய்து, சாட்சியங்களோடு பேசி (வச. 2), “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து” (வச. 3), அவருடைய சுவிசேஷத்தில் அவற்றை பெயர்கள், மேற்கோள்கள், சரித்திரதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதிவுசெய்துள்ளார். 

நாமும் அப்படியே செய்யமுடியும். தவறான செய்திகள் திருச்சபைகளை பிளவுபடுத்தி ஆத்துமாக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதினால் உண்மைகளைச் சரிபார்ப்பது அவர்களை நேசிப்பதற்கான ஒரு அடையாளமாகும் (10:27). ஒரு பரபரப்பான சம்வத்தை நாம் கேள்விப்படும்போது, அது உண்மையா என்று அறிந்து சரிபார்த்து, நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது. அவ்வாறு செய்து நல்ல தரமான செய்திகளை நாம் பரப்புவது என்பது சுவிசேஷத்திற்கான நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவ்வாறு செய்வதின் மூலம் “சத்தியத்தினால் நிரைந்தவரை” (யோவான் 1:14) நான் சேவிக்கமுடியும்.