பெப் என்னும் நாய்க்குட்டி, ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான பூனையை கொன்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது அந்த தவறை செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்த மெத்தையை மென்று தின்றது வேண்டுமானால் அதின் குற்றமாய் இருக்கலாம்.
பெப், 1920களில் பென்சில்வேனியாவின் கவர்னர் கிஃபோர்ட் பிஞ்சோட்டிற்குச் சொந்தமான ஒரு இளம் லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய். அந்த குற்றத்திற்காய் பெப், கிழக்கு மாநில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதின் புகைப்படம் கைதி அடையாள எண்ணுடன் எடுக்கப்பட்டது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர், அந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்தார். அவரது அறிக்கை செய்தித்தாளில் வெளிவந்ததால், பெப் உண்மையில் ஒரு பூனை கொலையாளி என்று பலர் நம்பினர்.
இஸ்ரவேலின் ராஜா சாலெமோன் தவறான செய்தியின் சக்தியை நன்கு அறிந்திருந்தார். அவர் எழுதும்போது “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்” என்று எழுதுகிறார் (நீதிமொழிகள் 18:8). சில வேளைகளில் நம்முடைய மனித இயல்பின் பிரகாரம், உண்மையல்லாத செய்திகளையும் நிஜம் என்று நம்பத் தூண்டப்படுகிறோம்.
மற்றவர்கள் நம்மைப் பற்றிய பொய்களை நம்பினாலும், தேவனால் அதை நன்மையாய் முடியப்பண்ணக் கூடும். ஆளுநர் பெப்பை சிறைக்கு அனுப்பினார். ஆனால் பெப் அங்கிருந்த கைதிகளுக்கு சிநேகிதனாய் மாறியது. அது அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலாய் இருந்து மனரீதியான சிகிச்சை கொடுத்தது.
மற்றவர்கள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தம் மாறாதது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுக்கும்போது, அதைக் குறித்து நாம் பொருட்படுத்தாமல், தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதையும் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் உங்களைக் குறித்து சொல்லக்கூடிய விமர்சனங்கள், தேவன் உங்களைக் குறித்து எண்ணுகிற எண்ணத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது உங்களை எந்த விதத்தில் ஊக்கப்படுத்துகிறது? அவருடைய நேர்த்தியான அன்பை இன்று எந்த விதத்தில் கொண்டாடுவீர்கள்?
அப்பா பிதாவே, என்னை உம்முடைய பிள்ளையாக்கினதற்காய் உமக்கு நன்றி. உம்முடைய அன்பை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.