அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார்.
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு… உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!
சிரிப்பு எப்போது “நல்ல மருந்தாய்” மாறுகிறது? வாழ்க்கையில் கடினமான தருணங்களை மேற்கொள்வதற்கு உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நகைச்சுவை உணர்வை கண்டறிவது எவ்வளவு அவசியம்?
அன்பான தேவனே, நகைச்சுவை உணர்வு என்னும் வரத்தைக் கொடுத்ததற்காய் உமக்கு நன்றி.