என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன்.
கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது.
நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும்.
உங்களுடைய பலவீனத்தில் தேவனுடைய பலம் வெளிப்பட்டதை நீங்கள் எப்படி அனுபவித்தீர்கள்? பலவீனத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவிசெய்யப்போகிறீர்கள்?
அன்பான தேவனே, ஒவ்வொரு நாளும் உம்மை அதிகதிகமாய் சார்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.