பாரீஸிக்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.
நீங்கள் இயேசுவை அறியாதிருந்தால், அவரையும் அவருடைய அன்பையும் தேடி ஓடுவதற்கு என்ன பிரயாசம் ஏறெடுக்கப்போகிறீர்கள்? நீங்கள் விசுவாசியாயிருந்தால், அவருடைய அன்பை மற்றவர்களிடம் எவ்விதம் பகிரப்போகிறீர்கள்?
இயேசுவே, உம்முடைய அன்பின் கரங்களுக்கு நேராய் என்னை நடத்தும்.