அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் “எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் “கூடுமானால்” என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?