அமெரிக்காவில் வடக்கு டகோட்டாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது பெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சையின் ஒரு பகுதியாக இசை சிகிச்சையைப் பெற்றாள். ஏன் என்று புரிந்து கொள்ளாமல், பலர் மனதளவில் இசையின் சக்திவாய்ந்த விளைவை அனுபவித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இசையின் ஒரு மருத்துவ நன்மையை ஆவணப்படுத்தியுள்ளனர். பெல்லா போன்ற புற்றுநோய் நோயாளிகளுக்கும், நடுக்குவாத நோய், மறதி நோய் மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இசை இப்போது பரிந்துரைக்கப்படுகிறது.
சவுல் மன்னன் அவதியுற்றபோது ஒரு இசை மருந்தை அணுகினான். அவனுடைய உதவியாளர்கள் அவனுடைய அமைதியின்மையைக் கண்டு, அவனுக்காகக் கின்னரம் வாசிக்கிற ஒருவரைக் கண்டுபிடித்து, அவனுக்கு “சவுக்கியமுண்டாகும்” (1 சாமுவேல் 16:16) என்ற நம்பிக்கையில் பரிந்துரைத்தனர். அவர்கள் ஈசாயின் மகன் தாவீதை வரவழைத்தனர். சவுல், அவனது இசையால் மகிழ்ந்து, தனக்கு “முன்பாக நிற்கட்டும்” என்று கேட்டான் (வச. 22). தாவீது, சவுலின் அமைதியற்ற தருணங்களில் இசை இசைத்து, அவனுடைய வேதனையிலிருந்து அவனுக்கு நிவாரணம் அளித்தான்.
நம்மில் இசை ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து தேவன் அறிந்திருப்பதை நாம் விஞ்ஞான ரீதியாக கண்டுகொள்ள ஆரம்பித்து மட்டுமேயுள்ளோம். நமது உடல்களுக்கும், இசைக்கும் சிருஷ்டிகரும் காரணருமான தேவன் நமக்கு அளித்த, சுலபமாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியத்திற்கான சிறிய மருந்து சீட்டு இசையே. நாம் எந்த காலகட்டத்தில் வாழ்ந்தாலும், நமக்கு எத்தகைய மருத்துவ வசதிகள் இருந்தாலும், நமக்கு இது ஏற்றதாகும். இசையைக் கேட்க வழி இல்லாவிட்டாலும், நம்முடைய சந்தோஷங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் நாம் தேவனைப் பாடலாம், நம்முடைய சொந்த இசையை உருவாக்கலாம் (சங்கீதம் 59:16; அப்போஸ்தலர் 16:25).
கடவுள் உங்களை அமைதிப்படுத்த இசையை எவ்வாறு பயன்படுத்தினார்? சவுலுக்கு தாவீது செய்தது போல் நீங்கள் எப்படி ஒருவருக்கு ஆறுதலைக் கொண்டுவர முடியும்?
அப்பா, போராட்ட வேளைகளில் என் இதயத்தையும் மனதையும் அமைதிப்படுத்த இசையை உருவாக்கி அதைப் பயன்படுத்தியதற்கு நன்றி.