இரயில்களை சரியான தண்டவாளத்திற்கு மாற்றுவது எப்படி என்று ஜாக் அறிந்திருந்தான். ஒன்பது வருட அனுபவத்தில், தென்னாப்பிரிக்காவின் உய்டென்ஹேஜ் நிலையத்திற்கு வரும் ரயில்கள், அவை செல்ல வேண்டிய திசையை பேரொலி மூலம் சுட்டிக்காட்டியதால், அவன் தண்டவாள மாற்றுக் கருவியைச் சரியாக இயக்குவான்.

ஜாக் மனிதனல்ல ஒரு பபூன் குரங்கு. அவனை ரயில்வே சிக்னல்மேன் ஜேம்ஸ் வைட் பராமரித்து வந்தார். ஜாக்கும் தன் பங்கிற்கு அவருக்கு உதவியது. ஓடும் ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்ததில் வைட் தனது இரண்டு கால்களையும் இழந்தார். வீட்டுவேலைகளில் அவருக்கு உதவ ஜாக் பயிற்றுவிக்கப்பட்டான். விரைவில் ஜாக் அவருக்கு வேலையில் உதவினான், உள்வரும் ரயில்களின் சமிக்ஞைகளுக்கு ஏற்ப அதன் தடங்களுக்கு ஏற்ற நெம்புகோல்களை இழுப்பதன் மூலம் எவ்வாறு தடம் மாற்றவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டான்.

வியக்கத்தக்க விதத்தில் ஒருவருக்கு உதவிய மற்றொரு மிருகத்தைப் பற்றி வேதம் சொல்கிறது, அது பிலேயாமின் கழுதை. பிலேயாம் ஒரு புறஜாதி தீர்க்கதரிசி, இஸ்ரவேலுக்குத் தீங்கு செய்ய எண்ணிய ஒரு ராஜாவுக்குச் சேவையாற்றினான். ராஜாவுக்கு உதவியாக பிலேயாம் கழுதையின் மேல் ஏறிச் சென்றபோது, ​​“கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்” அது பிலேயாமிடம் பேசியது (எண் 22:28). கழுதையின் பேச்சு, கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறக்கும் விதத்தின் ஒரு பகுதியாக இருந்தது (v. 31), உடனடி ஆபத்தைப் பற்றி எச்சரித்து, தேவஜனங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவனைத் தடுத்தது.

ஒரு ரயில்வே பபூன்? பேசும் கழுதை? ஏன் கூடாது? தேவன் இந்த அற்புதமான விலங்குகளை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அவர் உங்களையும் என்னையும் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமேயில்லை. அவரையே நோக்கிப்பார்த்து அவருடைய பலத்தை நாடினால், நாம் நினைத்ததை விட அதிகமாகச் சாதிக்க முடியும்.