சமைக்கும்போது ​​ஒரு இளம் தாய் இறைச்சியை ஒரு பெரிய பாத்திரத்தில் வைப்பதற்கு முன் பாதியாக வெட்டினார். ஏன் இறைச்சியைப் பாதியாக வெட்டினாள் என்று கணவர் கேட்க, “ஏனென்றால் என் அம்மா அதை அப்படி தான் சமைப்பார்” என்று பதிலளித்தாள்.

எனினும் கணவனின் கேள்வி அந்தப் பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே அவள் தன் தாயிடம் அந்த பாரம்பரியம் பற்றிக் கேட்டாள். அந்த தாயார் பயன்படுத்திய சிறிய பானையில் அது பொருந்தும் வகையில் அவர் இறைச்சியை வெட்டியதை அறிந்து அவள் அதிர்ச்சியடைந்தாள். மேலும் அந்த மகளிடம் பல பெரிய பானைகள் இருந்ததால், இறைச்சியை வெட்டுவது தேவையற்றது.

பல மரபுகள் ஒரு தேவையிலிருந்து தான் தொடங்குகின்றன, ஆனால் அவை கேள்வியின்றி தொடரப்படுகின்றன. இறுதியில் அது நடைமுறையாக மாறுகிறது. மனித மரபுகளைக் கடைப்பிடிக்க விரும்புவது இயல்புதான் அதைத்தான் பரிசேயர்கள் தங்கள் காலத்தில் செய்து கொண்டிருந்தனர் (மாற்கு 7:1-2). அவர்கள் தங்கள் மத விதிகளில் ஒன்றை மீறுவது போல் தோன்றினாலும் தடுமாறினர்.

இயேசு பரிசேயர்களிடம் ,”நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய்” (வ. 8) என்று கூறுகையில், மரபுகள் ஒருபோதும் வேதத்தால் உண்டாகும் அறிவை மாற்றக்கூடாது என்பதை அவர் வெளிப்படுத்தினார். தேவனைப் பின்பற்றுவதற்கான மெய்யான வாஞ்சை (வ. 6-7) வெளிப்புறச் செயல்களை விட நம் இதயத்தின் மனோபாவத்தில் கவனம் செலுத்தச்செய்யும்.

நாம் நம் மனதிற்கு விருப்பமான அல்லது மத ரீதியாகப் பின்பற்றும் எந்த பாரம்பரியங்களையும் தொடர்ந்து பகுத்தறிவதே நல்லது. ‘உண்மையிலேயே தேவை’ என்று தேவன் வெளிப்படுத்திய விஷயங்கள் தான் எப்போதும் மரபுகளுக்கு மேலாக வைக்கப்படவேண்டும்.