ரவியும் பானுவும் ஒருவரையொருவர் பார்த்து முகமலர்ந்தனர். அவர்கள் அகமகிழ்ச்சியைப் பார்க்கும்போது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது திருமணத் திட்டங்கள் பல தலைகீழாய் மாற்றப்பட்டிருந்ததை உங்களால் யூகிக்கவே முடியாது. இருபத்தைந்து குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோதும், இருவரிடமிருந்தும் மகிழ்ச்சியும் சமாதானமும் ஒளிர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பினிமித்தம் திருமண உடன்படிக்கை செய்து, தங்களைத் தாங்கிய தேவனின் அன்புக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
தேவன் தம் ஜனங்கள் மீது கொண்டிருக்கும் மகிழ்ச்சி மற்றும் அன்பை விவரிக்க ஏசாயா தீர்க்கதரிசி, மணவாளனும் மணவாட்டியும் ஒருவர் மீதொருவர் கொண்டிருக்கும் களிப்பை உருவகமாக வடிக்கிறார். தேவனின் வாக்குப்பண்ணப்பட்ட விடுதலையை விளக்க அழகான கவிதை நடையில், ஏசாயா தமது வாசகர்களுக்குத் தேவன் அவர்களுக்கு வழங்கிய இரட்சிப்பானது உருக்குலைந்த உலகில் வாழும் யதார்த்தத்தில் பிரதிபலிக்கிறது என்று நினைவுபடுத்தினார். அது இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதல், துயரப்படுபவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அவரது ஜனங்களின் தேவைகளுக்கான ஏற்பாடு (ஏசாயா 61:1-3). தேவன் தம் ஜனங்களுக்கு உதவினார், ஏனென்றால் மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பில் களிப்பதுபோல, “உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்” (62:5).
தேவன் நம்மில் களிகூருகிறார் மற்றும் நம்முடனான உறவை விரும்புகிறார் என்பது வியத்தகு உண்மை. உருக்குலைந்த உலகில் வாழ்வதன் விளைவுகளால் நாம் போராடும்போது கூட, நம்மை நேசிக்கும் தேவன் ஒருவருண்டு. அதிருப்தி கொள்ளாமல், களிப்புடன் “என்றென்றும் நிலைத்திருக்கும்” (சங்கீதம் 136:1) நீடித்த அன்புடன் நேசிக்கிறார்.
எந்த உருவகங்கள் தேவனின் அன்பை உங்களுக்கு நினைவூட்டுகின்றன? அவருடைய மகிழ்ச்சியான அன்பு உங்களுக்கு எப்படி மகிழ்ச்சியைத் தருகிறது?
அன்புள்ள தேவனே, அன்பாய் என்மீது மகிழ்ந்ததற்கு உமக்கு நன்றி.