பிப்ரவரி 18, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் பெர்சிவரன்ஸ் என்ற ரோவர் வாகனம் அங்கு தரையிறங்கியபோது, அதன் வருகையை கண்காணித்தவர்கள் “ஏழு நிமிட திகிலை” அனுபவிக்கவேண்டியிருந்தது. விண்கலம் 292 மில்லியன் மைல் பயணத்தை முடித்து, அது வடிவமைக்கப்பட்டபடி தானே தரையிறங்கும் சிக்கலான செயல்முறையை மேற்கொண்டது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு சிக்னல்கள் வந்துசேருவதற்கு சில நிமிடங்கள் ஆகும். ஆகையினால் அந்த ரோவர் வாகனத்திலிருந்து எந்த தகவலையும் நாசா விஞ்ஞானிகளால் கேட்க முடியவில்லை. பல உழைப்புகளையும் பொருட்செலவையும் விரயமாக்கி அந்த பிரம்மாண்ட கண்டுபிடிப்பைச் செய்தவர்கள் அத்துடன் தொடர்பை இழப்பது திகிலடையச்செய்யும் ஓர் அனுபவம். 

நாம் சிலவேளைகளில் தேவனுடைய சத்தத்தைக் கேட்கத் தவறும்போது இதுபோன்று உணருவதுண்டு. நாம் ஜெபிக்கிறோம் ஆனால் பதில் கிடைக்கவில்லை. வேதாகமத்தில் ஜெபத்திற்கு உடனே பதிலைப் பெற்றுக்கொண்டவர்களையும் (பார்க்க. தானியேல் 9:20-23), வெகு நாட்கள் கழித்து பதிலைப் பெற்றுக்கொண்டவர்களையும் (அன்னாளுடைய சம்பவம் 1 சாமுவேல் 1:10-20) நாம் பார்க்கமுடியும். ஆனால் வெகு தாமதமாய் பதில் கிடைத்த ஜெபத்திற்கான உதாரணம், தங்கள் வியாதிப்பட்ட சகோதரன் லாசருவுக்காக இயேசுவிடத்தில் ஜெபித்த மரியாள்-மார்த்தாள் சம்பவம் (யோவான் 11:3). இயேசு தாமதிக்கிறார். அவர்களின் சகோதரன் மரித்துப்போனான் (வச. 6-7, 14-15). ஆயினும் நான்கு நாட்கள் கழித்து அவர்களின் ஜெபத்திற்கு இயேசு பதிலளிக்கிறார் (வச. 43-44). 

நம்முடைய ஜெபத்திற்கான பதிலுக்காய் காத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரெயர் 4:16), அப்போது தேவன் நமக்கு உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார்.