எனது நண்பர் ரூயல், அவருடைய வகுப்பு மாணவர்கள் ஒருவருடைய வீட்டில் பழைய மாணவர்கள் கூடுகை நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். அந்த மாளிகையில் ஏறத்தாழ இருநூறு பேர் பங்கேற்கும் அளவிற்கு பிரம்மாண்டமாய் இருந்தது. அது இவருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது.
ரூயல் என்னிடத்தில், “நான் பல ஆண்டுகள் கிராமப்புறங்களில் இருக்கும் தேவாலயங்களில் ஊழியம் செய்திருக்கிறேன். சில வேளைகளில் என்னுடைய வகுப்பு மாணவர்களின் பொருளாதார வளர்ச்சியை பார்க்கும்போது நான் பொறாமைப்படக்கூடாது என்று எண்ணினாலும் என்னால் தவிர்க்கமுடியவில்லை. நான் ஊழியனாகாமல், பெரிய வியாபாரியாய் மாறியிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நான் சிலவேளைகளில் யோசிப்பதுண்டு” என்று சொன்னார்.
மேலும் ரூயல் புன்னகையுடன், “அவர்கள் மீது பொறாமைப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை பின்பாக உணர்ந்துகொண்டேன். நான் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். அது நித்தியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.” இதை அவர் சொல்லும்போது அவருடைய முகத்தில் தென்பட்ட சமாதானத்தை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.
ரூயல் தம்முடைய சமாதானத்தை மத்தேயு 13:44-46லிருந்து கண்டுபிடித்தார். தேவனுடைய இராஜ்யம் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய இராஜ்யத்தை நாடி அதற்காக வாழும் வாழ்க்கை என்பது சற்று வித்தியாசமானது. சிலருக்கு அது முழுநேர ஊழியமாய் தெரியலாம், இன்னும் சிலருக்கு தங்களுடைய வேலையிலிருந்தே பகுதிநேரமாய் செய்யும் ஊழியமாய் தெரியலாம். நம்மை தேவன் எந்த ஊழியத்தை செய்ய தெரிந்துகொண்டாலும், இயேசு சொன்ன உவமையில் இடம்பெற்றிருந்த நபர்களைப்போல புதையுண்டிருக்கிற பொக்கிஷமாய் அதைக் கருதி, தொடர்ந்து அவருடைய நடத்துதலை விசுவாசித்து கீழ்ப்படிவோம். தேவனைப் பின்பற்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் மேன்மையான ஒன்றை நாம் சுதந்தரிக்க முடியாது (1 பேதுரு 1:4-5).
நம்முடைய ஜீவியம் அவருடைய கரத்தில் இருக்கும்போது, அது நித்திய கனிகளைக் கொடுக்கும்.
தேவனைப் பின்பற்றும் வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதை நீங்கள் இழந்து வாழுவதாக எண்ணுகிறீர்கள்? மத்தேயு 13:44-46 எந்த விதத்தில் உங்களை உற்சாகப்படுத்துகிறது?
தகப்பனே, என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் உம்மில் நான் கண்ட பொக்கிஷங்களை கொண்டாடுவதாக அமையட்டும்.